நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907

நிலையத்தின் தோற்றமும் வளற்சியும்...


நிலையத்தின்

தோற்றமும் வளற்சியும்

யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியே வடமராட்சி (வடமர் என்போர் ஆட்சி புரிந்த இடம்) அதிலும் நெற்றித் திலகம் போல் துலங்கிய, துலங்கும் பகுதி புலோலி.(புலவர்+ஒலி) = புலோலி; வடமராட்சி யாழ்ப்பாணத்தின் மூளை என்பர் கற்றறிந்தோர்.

எப்படியெனில்,அரசியல்,கல்வி,விஞ்ஞானம்,எண்கணிதம்,சோதிடம்,ஆராய்ச்சி எனப்பல துறைகளிலும் உலகம் போற்றும் விற்பன்னர்கள் நிரம்பிய பிரதேசம், தமிழ் நாட்டார் கூட முயலாத அரிய வகையில் `அமெரிக்காவுக்கு "அன்ன பூரனி" என்னும் பாய்மரக்கப்பலில் சென்று முத்திரை பதித்தவர்களும்,அணு ஆராய்ச்சித்துறையில் முதுபெரும் விஞ்ஞானி சு.சண்முகதாஸ்,இரசாயணத்துறையில் உலக இரசாயன ஆராய்ச்சி நிபுணத்துவம் கொண்ட அழகையா துரைராசா,விலங்கியல் துறை இரசாயன நிபுணர் டாக்டர் செ.பெருமாள்பிள்ளை,எண்கணித மேதை எலியேசர் மற்றும் பலர்,தமிழ்நாட்டில்,ஆறுமுகநாவலருக்குப் பின் சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை புகழ்க்கொடி நாட்டினார்.அந்த நாட்கள் வித்துவக் காய்ச்சல் பலமாக இருந்த காலம். சிவனின் பாடலுக்கு குறை கண்ட நக்கீரன் போல் இராமலிங்க அடிகளின் "அருட்பா" என்னும் நூலுக்கு மறுப்புத் தெரிவித்து, அது "அருட்பா" அல்ல "மருட்பா" என வாதிட்டு நீதிமன்றத்தில் தம் கொள்கையை நிலைநாட்டி வெற்றி கண்டார். அன்னாரின் ஆக்கங்கள், பதிப்புகள், பிரசங்கங்கள் பலராலும் போற்றி வரவேற்கப்பட்டன. அன்னார் தாம் வழிபட்ட குலதெய்வம் முருகன் ஆலயத்தை "புதுச்சந்நதிக்கந்தன்" ஆலயம் எனவும் மகாவேலன்தணி (மாலந்தெணி) வேலன் தங்கும் இடம், மேலைப்புலோலி (புலோலி மேற்கு) "பச்சிம புலவ கான நகரம்"(பச்சிமம்-மேற்கு திசை) மாயக்கை (மாயா யாக்கை) இப்படியாக பல தீந்தமிழ்ச் சொற்களை தமது பேச்சிலும் எலுத்திலும் எடுத்தாண்டு வந்தார் என்பதையும்அறிகிறோம்....

முருகன் அருளாலும், சதாவதானி கிருபையாலும் நம் ஊர் பேரும்புகழுமாக ஒலி எழுப்பக் கூடியதாக, அந்த நாட்களில் சில இளைஞர் மனங்களில் அன்னாரைப் பற்றிய முழு விபரங்களோ,அவரின் தோற்றமோ எதுவும் தெரியாது..சில முதியவர்கள் கூறிய சில தவகல்களை ஆராய்ந்து பல அரிய வரலாறுகளையும் அன்னாரின் முழு விபரங்களையும் ஓரளவுக்கு அறிந்து கொண்டோம்.நமது ஊரில் இயங்கி வந்த வாசிகசாலை இடைக்கிடை இயங்குவதும், இயங்காததுமாக இருந்தது. அதை முன் நிறுத்தி அன்னார் பெயரால் புதிப்பிக்க எண்ணி "மாலந்தெணி வாசிகசாலை"என்பதை புலவர் கதிரைவேற்பிள்ளை வாசிகசாலை என நடாத்தினர். பின் சதாவதானம் கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையமாக உருவெடுத்தது....

திரு செல்லத்தம்பி முத்துக்கிருஸ்ணா மற்றும் அமரர்கள் மு நாராயணமூர்த்தி,டாக்டர் செல்லத்தம்பி இராமச்சந்திரன், சே.அருச்சுனா முதலியவர்களால், (young men's library) இளைஞர் வாசிகசாலை முதலில் திருமதி பார்வதி கந்தையா என்பவர் வீட்டில் இயங்கியது.(சிவலிங்கம் P.M.வீடு) என்போன்ற சிறுவர்களுக்கும் பாடம் சொல்லித்தரப்பட்டது. அந்த நாட்களில் கல்வி நிலையங்கள்(TUTORY) கிடையாது.ஆசிரியர்கள் தத்தம் வீடுகளில் ஒரு சிலருக்கு கற்பித்து வந்தார்கள், அவ்விடத்தில் இடக்கிடை வீரகேசரி,ஈழகேசரி,இந்து சாதனம் என்ற பத்திரிகைகள் இடப்பட்டு பெரியவர்கள் வாசிப்பார்கள்.நவராத்திரி,சரஸ்வதி பூஜை முதலியன நடைபெறும். அன்றும் தற்காலத்தைப்போல் நாம் அடிபிடிபட்டு சுண்டல்,அவல் முதலியனவற்றை பெற்றோம். மேற்கூறியோர் படிப்பு சம்பந்தமாக உத்தியோகரீதியிலும் பிற ஊர்களிற்கு செல்ல நிலையம் மூடப்பட்டு இருக்கும். சில காலத்தின் பின், தற்போதைய நிலையம் இருக்கும் இடம் இருபக்கம் தூண்களுடன் கூடிய சிறு மண்டபம்(மடம்) ஆக இருந்தது. பிற்பாடு அமரர்கள் சி.கோவிந்தபிள்ளை,வேலுப்பிள்ளை(தாடி அப்பா) பொன்னையா,கா.முருகுப்பிள்ளை இதனுடன் சேர்த்து அறை ஒன்றைக் கட்டினார்கள்.அவர்களின் தனிப்பட்ட தயவில் ஒரு சில பத்திரிகைகள் போடப்பட்டன.நாம் நிலையத்தை அவர்கள் ஒப்புதலோடு பாரமெடுத்து அன்னாரின் பெயரால் நிலையத்தை நிறுவி ஊரார்களின் ஒத்துழைப்புடன் இயக்கி வந்தோம்.

அன்னாரைப் பற்றி பல வழிகளில் பலரையும் விசாரித்து கடைசியில் பிள்ளை அவர்கள் இளவயதில் கடமை பார்த்த சட்டத்தரனி வீட்டாருடன் தொடர்வு கொண்டோம்,அவ்விடத்தில் எமக்குப் புதையல் கிடைத்தது போன்ற பல விடையங்களை பிள்ளை அவர்களின் நிழற்படம்(கண்ணாடிச் சட்டத்துடன் ) அன்றுதான் நாம் அவரை முதல் தடவையாகப் பார்த்தோம்.அசல் ஆறுமுக நாவலர் மாதிரி கம்பீரமாக காட்சி தந்தது இந்த வரலாறுகளையும் படத்தையும் எமக்குத் தந்தவர் பிரபல சட்டத்தரணி அமரர் M.S கந்தையா அவர்களே.இவரின் தகப்பனாருக்கே பிள்ளை அவர்கள் சிலகாலம் எழுத்தராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.நிலையத்தில் இப்பொழுது இருக்கும் நிழற்படம், உருவச்சிலை என்பன அவர் தந்த படத்தை பார்த்தே பிரதி எடுத்தவையாகும்.

அக்கால கட்டத்தில்ஆசிரியமணி .சபாபதிப்பிள்ளை,சைவப்புலவர் சி அருளம்பலம் மு.பொ.வீரபாகு,.தேவராசா,சி.நந்தகோபால், சி.சுப்பிரமணியம்,தி.சீனிவாசகம்,.மாணிக்கவாசகர்,சட்டத்தரணி .தங்கராசா அமரர்கள் கு.தியாகராசா,திருஞானசம்பந்த தேசிகர்,ஆறுமுக கந்தவேல்,மு.மாணிக்கம்,பொ.தர்மலிங்கம்,பொ.கனகசபை மற்றும் பலரும் மாறி மாறி ஒத்துழைத்து நிலையத்தை வழி நடாத்தினோம் நிலையத்தை விரிவுபடுத்தி அரசாங்கத்திலும் சேர்ந்து, உதவி நன்கொடையும் பெற்றுவந்தோம்.

சமய, சமூக, கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கென நிலையத்தின் ஒரு கிளையாக "கதிரைவேற்பிள்ளை கலாமன்றம்" என ஒரு பிரிவு ஏற்படுத்தி, அக்காலத்தில் ஆலயங்களில் நடைபெற்று வந்த சதிர்க்கச்சேரி,மிருக பலி போன்றவற்றை எதிர்த்தும் தீமைகளை விபரித்தும் துண்டுப் பிரச்சாரங்களை அச்சிட்டும் மக்கள் மத்தியில் பரப்பி பிரச்சாரம் செய்து வந்தோம். எமக்குப் பல வழிகளிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக நம் கிராமத்தின் ஒரு பகுதியில் சற்று கூடுதலாக இருந்தது. கால ஓட்டத்தில் இவை இரண்டும் இப்போ நடைபெறாமல் இருப்பது போற்றுதற்குரியது. மன்றத்தின் அனுசரனையுடன் பத்திரிகைகளிலும், வானொலியிலும் நா..பற்றி கட்டுரைகளும்,பேச்சுக்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன.

வானொலியில் தென்புலோலியைச் சேர்ந்த மு.கணபதிப்பிள்ளை, .தேவராசா மற்றும் ஒரு சிலரின் பேச்சுக்கள் ஒலிபரப்பாகி வந்தன. சகல பாடசாலைகளில் கொடிதினமும் நடைபெற்றன...

யாழ்மாவட்டத்தில் பிரபல எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள்,கல்விமான்கள்,துன்னையூர் பண்டிதர் கனகசபாபதி, தும்பளை பண்டிதர் கிருஸ்ணபிள்ளை, வரதர்,. வேலன், வேந்தனார், குலசபாநாதன்,இளங்கீரன்,புதுமைலோலன்,அரியாலையூர் கவிஞர் ஐயாத்துரை,செல்வி அருள் நங்கை,செல்வி செல்வவிநாயகம், திருமதி பத்மாசோமகாந்தன், கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அல்வை சுகணா,வல்வை சிவசங்கர வைத்திலிங்கம் போன்றோரும்,பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.சந்தனப்பொட்டு கமகமக்க குங்குமப்பொட்டு பளபளக்க என்னும் பாடலின் மூலம் புகழ்பெற்ற தமிழ் நாட்டுப் பாடகி மைதிலி குழுவினரும் பங்குபற்றினர். குலசபாநாதன் அவர்களால் தொகுக்கப்பட்ட "நா.கதிரைவேற்பிள்ளை" என்னும் நூலை குன்றக்குடி அடிகள் வெளியிட்டுப்பாராட்டினார். மேற்கூறியபடி காலத்துக்குகாலம் விழாக்களில் பலர் கலந்துகொண்டனர்.

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த நவரத்தினசாமிக்கு அவர் சாதனையைப் பாராட்டி நாம் விழாவில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தோம்.பெளர்ணமி விழா என்ற பெயரில் இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் 3 நாட்கள் தனித்தனியே விழா ஆலடிவிநாயகர் வீதியில் நடைபெற்றன.

மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் பேர்த்தியார் விசயபாரதி தமது பாட்டனாரின் ஞான குரு. மோகனம் அருளம்பலம் அவர்களின் சமாதிக்கு வந்த பொழுது அவருக்கும் கவிஞர் யாழ்ப்பாணன்(திரு வே. சிவக்கொழுந்து ஆசிரியர்) தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடாத்தி அருளம்பல சுவாமி பற்றியும், நா..பற்றியும் விளக்கம் கொடுத்து கலாபவன மேல்மாடியில் .தேவராசா அவர்களின் அனுசரணையுடன் கூட்டம் நடாத்தி அவர்களை எமது நிலையத்துக்கும், புதுச்சந்நிதி ஆலயத்துக்கும், அருளம்பல சுவாமி சமாதிக்கும் அழைத்துச்சென்று விளக்கங்களுடன் வழிபாடும் நடாத்தினோம்.

நிலைய ஆலயத்தில் அன்று மூலவிருட்சமாக ஆலும், அரசும் கிளைபரப்பி விழுதுவிட்டு பரந்து இருந்தன. காலக்ட்டத்தில் பழுதாகிப்பட்டுபோயிட்டன, கிளைகள் வெட்டப்பட்டு மூலமரமும் அகற்றப்பட்டது. நிலைய சுற்றாடல் வெப்பமாக இருந்ததால் மீண்டும் அவ்விடத்தில் மரம் நடவேண்டிய ஆலோசனைகளை அமரர்கள் வேலுப்பிள்ளை (தாடி அப்பா) சி.கோவிந்தப்பிள்ளை,கா.முருகுப்பிள்ளை,பொன்னையா போன்றோர் தந்தனர் அதன் பிரகாரம் நானும் வேறுசிலரும் சேர்ந்து அரச மரக்கன்று ஒன்றும் வெட்டிய ஆலமரக்கிளை ஒன்றும் நாட்டினோம். அவையே இன்று கிளைபரப்பி வான் நோக்கிப் பரந்து தண் நிழலும் தந்து காட்சி அளிக்கின்ற நிலையமும் இவைபோல் ஓங்கி வளர்ந்து ஊருக்கும் நாட்டுக்கும் உதவி புரிந்து வளர என் ஆசிகள்..

எமது நிலையத்துக்கு ஆலோசனைகளும், உதவியும்,பங்குபணிகளும் புரிந்தோர் பலர். அவர்களில் முக்கிய இடத்தில் உள்ளோர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை (புலோலி) சாலினி இளந்திரையன்,முனைவர் இளந்திரையன், தனிநாயக அடிகள், மானிப்பாய் முதலியார் தியாகராசா,அரசாங்க அதிபர் நவரத்தினராசா,பேராசிரியர் . துரைராசா மற்றும் பலர் உலக தமிழ் ஆராய்ச்சிச்சங்கம் (WORLD TAMIL RESEARCH ASSOCIATION ) மும்மாத வெளியீடு இலக்கியம்(LITERATURE) எனும் ஆங்கில சஞ்சிகையில் "Lexicograper N.kathiraivetpillai...என்னும் தலைப்பில் கனிநாயக அடிகள் கட்டுரை எழுதிப் பெருமை சேர்த்தார்.

.......சி.சுப்பிரமணியம்......