நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907



மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்.

சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் சிவராத்திரி விரதம் முக்கிய விரதமாகும். நித்ய, பட்ச, மாத, யோக, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். மாதந்தோறும் கிருட்ணபட்ச சதுர்த்தசியில் வருவது நித்ய சிவராத்திரி ஆகும். மாதந்தோறும் வருவது மாத சிவராத்திரி ஆகும். திங்கட்கிழமை பகல், இரவு இரு பொழுதும் அமாவாசையாக இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். கிருட்ணபட்ச மாசி மாத சதுர்த்தசி அன்று சிவராத்திரி மகாசிவராத்திரி ஆகும்.


சிவராத்திரியைப் பற்றி பல புராணக்கதைகள் உண்டு. ஒரு காலத்தில் உலகம் அழிந்த போது மீண்டும் உலகை சிருஸ்டிக்க வேண்டி அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த இரவே சிவராத்திரி ஆகும். இன்னொரு கதையில் ஒரு நாள் அன்னை உமா விளையாட்டாக தந்தை ஈசனின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும். மற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது.
ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான். துஸ்ட மிருகங்களிற்கு அஞ்சிய வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் அறியமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வ தளை கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.

சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு சாமப் பூசை ஆகம விதிப்படி செய்யப்படும். முதல் சாமம் பஞ்ச கவ்விய அபிசேகம் செய்து, சந்தனக்காப்பிட்டு வில்வம், தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு பொங்கல் நிவேதனம் செய்யப்படும்.இரண்டாம் சாமம் சர்க்கரை, பால் தயிர், நெய், பழச்சாறு கலந்த பஞ்சாமிர்த அபிசேகம் செய்து, அகில் காப்பிட்டு, வில்வம், துளசி அர்ச்சனை செய்து, சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.
மூன்றாம் சாமம் தேன் அபிசேகம் செய்து, பச்சைக் கற்பூரக் காப்பிட்டு, மல்லிகை, வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும்.
நான்காம் சாமம் கருப்பஞ்சாறு அபிசேகம் செய்து குங்குமப்பூ காப்பிட்டு, நந்தியாவர்த்தம், நீலோற்பலம், வில்வம் அர்ச்சனை செய்து சுத்தான்னம் நிவேதனம் செய்ய வேண்டும்.

வீPடுகளில் பூசை செய்பவர்கள் சிவலிங்கம் உள்ளவர்கள் சிவலிங்கத்திற்கோ, இல்லாதவர்கள் நடராஜர் சிலையிற்கோ, அதுவும் இல்லாதவர்கள் சிவன் படத்திற்கோ நான்கு சாமப்பூசைகள் செய்தால்போதுமானது. சிவராத்திரியன்று உபவாசமிருந்து (முடியாதவர்கள் இரவில் பால் பழம் அருந்தி) பூசை செய்யலாம். மாலை 6.30, இரவு 9.30, நடுச்சாமம் 12.30, அதிகாலை 3.30 ஆகிய வேளைகளில் பூசை செய்யலாம். வில்வ பத்திரம் கொண்டு 108 தடவை பஞ்சாட்சர மந்திரம் செபித்து தூப, தீப, ஆராதனை செய்து பூசை செய்ய வேண்டும். பூசை தவிர்ந்த ஏனைய நேரத்தில் தேவாரம் ஓதலாம். பஞ்சாட்சர செபம் செய்யலாம். அதிகாலையில் சிவனடியார்களிற்கு அமுது இட்டு விரதத்தினை நிறைவு செய்யலாம். அன்னதானம் செய்தால்தான் விரதத்தின் முழுப்பலன் கிடைக்கும்.
மார்க்கண்டேயரை காப்பாற்றியது, கண்ணப்பரிற்கு அருள் புரிந்தது, அர்ச்சுனனிற்கு பசுபதாஸ்திரம் வழங்கியது, பீமன் தன் ஆணவம் அழியப்பெற்றது, அன்னை உமைக்கு ஈசன் தன் உடலில் சரி பாதி தந்தது இவை எல்லாம் சிவராத்திரி விரத்தினால் ஏற்பட்டவையே.

இந்த வருடம் மாசி மாத கிருஸ்ண பட்ச சதுர்த்தசி திதி 16-02-2007 இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி 54 நிமிடத்திற்கு ஆரம்பித்து இரவு 12 மணி 35 நிமிடம்வரையுள்ளது. அன்று இரவு 11 மணி 30 நிமிடம் முதல் 1 மணிவரையிலான லிங்கோத்பவ காலமான மகா புண்ணிய காலத்தில் சிவனை தியானிப்பவர்களிற்கு முத்தான வாழ்வு கிட்டும்.
சிவனிற்குரிய சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிபட்டு சகல நலமும் பெறுவோமாக.