பாடல்:-செந்தமிழ் அணங்கின்.....
இயற்றியவர்:-புலோலியூர் வேல் .நந்தகுமார்.
பாடியவர்:-ரஜீவன்
இசை:- ஸ்ரீராஜ்
செந்தமிழ் அணங்கின் சிந்தையில் என்றும்
தங்கும் தமிழொளித் துங்கவனே - எங்கள்
சந்ததிப் பேறே சதாவதானியே உம் பதம்
பணிகின்றோம் - நூற்றாண்டாய் உம்
புகழைப் போற்றுகின்றோம்.....
செம்மை மிகு சைவமதும் சேரோங்கு செந்தமிழும் தழைத்தோங்கி
மேலைப் புலோலிதனில் வந்துதித்த எங்கள்
வாலைத் தமிழ் வாருதியே கதிரைவேற்பிள்ளையே,
தமிழ்நாடு சென்று நீர் செய்த பணிகளினை
திரு.வி.க வாக்காலே கேட்டறிந்தோம்
நூற்றாண்டாய் உமை இங்கு போற்றுகின்றோம்.
ஆற்றல் கொண்ட உம் பெயரில் சனசமூக நிலையம் வைத்து
சமூகத்திற் பல பணிகள் ஆற்றுகின்றோம்.
[செம்மை மிகு சைவமதும்....]
அகராதிப் பேராசானாய் தமிழ்ப் பேரகராதி தந்ததையும்
சித்தாந்த மகா சரபமாய் மாயாவாத தும்ஷ கோளரியாய்
அருட்பாவின் பெருமைதனைக் காத்ததையும்
ஆலய வழிபாட்டை மீட்டதையும்
தனியொரு மனிதனாய் தமிழகத்தை ஈழத்திற்கு
தலைபணிய வைத்ததையும்...
சதாவதானம் செய்து சதாவதானி ஆனதையும்
நல்லை நகர் நாவலரின் அடிச்சுவட்டில் பதிப்போடு
உரைகள் பல வகுத்ததையும்
சைவத் தமிழ் கூறு நல்லுலகம் என்று மறவாது
தமிழ் உள்ளவரை உம் புகழ் மறையாது
[செம்மை மிகு சைவமதும்....]
சுப்பிரமணிய பராக்கிரமம் உம் பக்தியை சொல்லுதையா
சைவ மகத்துவம் உணர்த்திய செம்மலெ
நைடதத்திற்கு எழுதிய உரை கண்டு
வையகம் வியக்குதையா.
சைவத்தின் காவலரனாய் செந்தமிழ் நாவலராய்
நற்றமிழ் ஆசானாய் நீர் காட்டிய பாதையிலே
போகின்றோம் நினைவுவிழா கொண்டாடிப் போற்றுகின்றோம்.
[செம்மை மிகு சைவமதும்....]